ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

பாணாவரம் கூட்ரோட்டில் சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.

ராணிப்பேட்டை

ஆக்கிரமிப்பு வீடுகள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாணாவரம் கூட்ரோட்டில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசிப்பதுடன், கடைகளும் கட்டி உள்ளனர். இந்தநிலையில் தற்போது அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. அதைத்தொடர்ந்து அதிகாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.

அகற்றம்

அதன்படி வாலாஜா நெடுஞ்சாலை கோட்ட உதவி பொறியாளர் பாலாஜி சிங் தலைமையில், பொறியாளர் நித்தின், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சுரேஷ் மற்றும் சாலை பணியாளர்களை கொண்டு பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது ஒரு சிலர் வீடுகளை இடிக்கக்கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story