ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

தொண்டனந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. இதன் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஒன்றியம் பழையசிறுவங்கூர் ஊராட்சிக்குட்பட்ட தொண்டனந்தல் கிராமத்தில், ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி மேற்பார்வையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அகஸ்டின் மகன்கள் பங்கிராஜ், ஜான்மார்டீன், ஏசுராஜ், சின்னப்பன் ஆகியோரின் ஓட்டு வீடுகள் மற்றும் விளைநிலம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் மேற்படி ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு வேறு சொந்த இடம் இல்லை, மாற்று இடம் வழங்கக்கோரி கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

அப்போது திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சங்கராபுரம் துணை தாசில்தார் ராமமூர்த்தி, பகண்டைகூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், ஊராட்சி தலைவர் செல்லம்மாள்பால்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் பாக்கியராஜ், மணிகண்டன் உள்பட பலர் உடனிருந்தனர். அசம்பாவிதங்களை தடுக்க 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story