மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்


மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:45 PM GMT)

புளியரை அருகே காரில் ரூ.2¾ லட்சம் சிக்கிய வழக்கில் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி

காரில் சிக்கிய பணம்

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனை சாவடி அருகே தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி (வயது 58) பணி முடிந்து தனது கணவர் ஹாட்சனுடன் காரில் நெல்லையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

புளியரை அருகே கற்குடி-தவணை விலக்கில் சென்றபோது, அவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் சுமார் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து அவரை புளியரை சோதனை சாவடிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை வீட்டில் சோதனை

இந்த நிலையில் தென்காசி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பால்சுதர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண் ராஜா மற்றும் போலீசார் நேற்று காலை 7.30 மணிக்கு நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள பிரேமா ஞானகுமாரி வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் பிரேமா ஞானகுமாரி, அவரது கணவர், மகள் இருந்தனர். அவர்களின் செல்போன்கள் அனைத்தும் 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டது. வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பணியிடை நீக்கம்

இதற்கிடையே, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரியை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் நேற்று உத்தரவிட்டார்.

பிரேமா ஞானகுமாரி இதற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கோவையில் பணியாற்றியபோது இதேபோன்று கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story