ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

போடி அருகே ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

ஆக்கிரமிப்பு

போடி அருகே சன்னாசிபுரம் கிராமம் உள்ளது. அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மயானத்திற்கு செல்வதற்காக முதல்-அமைச்சர் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. ஆனால் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு ஒன்று கூடினர். பின்னர் சாலை பணியில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து கேட்டனர்.

சாலை மறியல்

இதையடுத்து சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகே சாலை அமைக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி நகர் போலீசார், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர்.

அப்போது அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகுதான் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story