டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய வேண்டும்


டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2023 2:21 AM IST (Updated: 2 July 2023 4:13 PM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மின்மாற்றியை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்மாற்றி

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் புராதன வனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காலத்தால் பழைமை வாய்ந்த இக்கோவிலில், திருப்பணி வேலைகள் செய்து குடமுழுக்கு விழாவை நடத்த கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ. 1¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்த நிதி மற்றும் கிராம மக்களின் பங்கு தொகையையும் சேர்த்து ரூ.30 லட்சம் மதிப்பில் திருத்தேர் வடிவமைக்கப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அதுவும் வெள்ளோட்டம் விடப்படாமல் நிலைத்தடத்தில் அப்படியே உள்ளது.

இடமாற்றம்

இந்த நிலையில், கோவிலின் திருப்பணி வேலைகள் தொடங்குவதற்கும் திருத்தேர் வெள்ளோட்டம் விடுவதற்கும் வசதியாக கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லை. மேலும், கோவில் வளாகத்தின் எதிர்ப்புறம் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் மாற்றி செயல்பட்டு வருகிறது. இந்த மின்மாற்றியை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்து கோவிலின் முன்புற வளாகப் பகுதியில் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோவிலின் முகப்பு பகுதியில் உள்ள இடத்தை தூய்மையாக பராமரிப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story