தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும்


தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:45 PM GMT)

மன்னார்குடி நகரில் தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

திருவாரூர்

மன்னார்குடி:

நகர சபை கூட்டம்

மன்னார்குடி நகரசபை கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கைலாசம், ஆணையர் நாராயணன், மேலாளர் மீரா மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் விவாதத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

திருச்செல்வி (அ.ம.மு.க) : மன்னார்குடியில் சமீபத்தில் நடந்த விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வலம் நடந்த அனைத்து தெருக்கள் மற்றும் முக்கிய கடைவீதிகளில் மூன்று மணி நேரம் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்பட்டது இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஊர்வலத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேகத்தடைகள்

பாரதிமோகன் (தி.மு.க.): பைபாஸ் ரோடு பகுதியில் வேகத்தடை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நகர் முழுவதும் கொசு மருந்து அடித்திட வேண்டும்.

ஆர்.ஜி.குமார் (அ.தி.மு.க.): தேவையற்ற பகுதிகளில் போடப்பட்ட வேகத் தடைகளை குழு அமைத்து ஆய்வு அகற்ற வேண்டும்.

ஐஸ்வர்யா மகாலட்சுமி (தி.மு.க.) : நல்லாங்குட்டை பகுதியில் இரவு நேரங்களில் அவ்வழியாக பெண்கள் செல்ல அச்சமாக உள்ளது. எனவே நான்கு கரைகளிலும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

சூரியகலா (அ.தி.மு.க.): ஆனைவிழுந்தான்குளம் பெத்தபெருமாள்கோவில் அருகே சாலை பாலம் கல்வெட்டு சரி செய்து தர வேண்டும்.

ஆய்வு

புகழேந்தி (தி.மு.க.): கீழப்பாலம் பகுதியில் புதிய ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.

ராசாத்தி (தி.மு.க.): செட்டிக்குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும், தாமரைக்குளம் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

நகராட்சி துணைத் தலைவர் கைலாசம்:- தற்காலிக பஸ் நிலைய பகுதிகளில் போலீஸ் பீட் அமைக்க வலியுறுத்த வேண்டும். மேலும் நகராட்சி குளங்களை மீன் குத்தகைக்கு ஏலம் விடக்கூடாது.

நகர்மன்ற தலைவர் தலைவர் மன்னை சோழராஜன்:- நகர் முழுவதும் எனது தலைமையில் குழு அமைத்து நேரில் ஆய்வு செய்து தேவையற்ற இடங்களில் போடப்பட்ட வேகத்தடைகள் அகற்றப்படும். வரும் ஆண்டுகளில் விநாயகர் ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகமும் இணைந்து நெறிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும், நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வாரத்திற்கு இரண்டு முறையாவது கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுவதை நகரமன்ற உறுப்பினர்கள் கண்காணித்து அது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றார்.


Next Story