தரமற்ற கட்டுமானம் அகற்றப்பட்ட 2 ஆண்டுக்கு பிறகு தடுப்பணை கட்டும் பணி: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆண்டிப்பட்டி அருகே தரமற்ற கட்டுமானம் அகற்றப்பட்ட 2 ஆண்டுக்கு பிறகு தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலையடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் தரமற்ற தடுப்பணை கட்டப்பட்டது. சிமெண்டு கலவைக்கு பதில், செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரவோடு இரவாக தரமற்ற தடுப்பணை அகற்றப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக கலெக்டர் உத்தரவின்பேரில், அந்த தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், மீண்டும் அந்த இடத்தில் தடுப்பணை கட்டும் பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
2 ஆண்டுகளாக தடுப்பணை பணிகள் முடங்கி கிடந்ததால், இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் விவசாயிகள் முறையிட்டனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த தடுப்பணை கட்டும் பணி தற்போது தொடங்கி உள்ளது. சிமெண்டு கலவையுடன் தடுப்பணை கட்டப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.