ரெங்கநாதர் கோவில் இடம் மீட்பு நடவடிக்கை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இடம் மீட்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்புஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இடம் மீட்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்புஏற்பட்டது.
அன்னதானம்
ஸ்ரீரங்கம் காந்திரோட்டில் மாநகராட்சி கோட்ட அலுவலகத்திற்கு கிழக்கில் ராமசாமிபிள்ளை தோட்டம் என்ற இடம் உள்ளது. சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தை ராமசாமிபிள்ளை ரெங்கநாதர்கோவிலில் நடைபெறும் உற்சவகாலங்களில் அன்னதானம் மற்றும் தண்ணீர்பந்தல் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யும் வகையில் ஏற்பாடு செய்துவைத்து ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் சிலர் அந்த இடத்தை வேறு குத்தகை மற்றும் வாடகைக்கு விட்டு அதன் பலனை அனுபவித்து வந்துள்ளனர். தகவலறிந்த கோவில் நிர்வாகம் அந்த இடத்தை கோவில் வசம் ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியானமுறையில் பதிலளிக்கவில்லை.
கோர்ட்டில் வழக்கு
இதையடுத்து கோவில் நிர்வாகம் இடத்தை மீட்டு தருமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் தீர்ப்பு கோவிலுக்கு சாதகமாக வந்தது. இந்நிலையில் அந்த இடத்தை பல்வேறு நபர்களுக்கு விற்றுவிட்டனர். அந்த இடத்தை வாங்கியவர்கள், அங்கு 9 அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு தனிவீடுகள், ஒரு ஆஸ்பத்திரி, இரண்டு வணிகவளாகங்கள் போன்றவற்றைக் கட்டி தங்கள் பயன்பாட்டில் வைத்துள்ளனர். அத்துடன் அந்த இடத்தை தாங்கள் முறைப்படிவிலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறி உரிமை கோரியுள்ளனர்.
மேல்முறையீடு
இதையடுத்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், சம்பந்தப்பட்ட இடம் கோவிலுக்குத்தான் சொந்தம் என்றும் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு வழங்கியது.
இதையடுத்து கோவில் அதிகாரிகள், வக்கீல்கள், கோர்ட்டு அமினாவுடன் வந்து சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக நேற்று காலை தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் வக்கீல்கள் ஒன்று திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம், அங்கு குடியிருப்பவர்கள் அரசின் நிலைப்பாடு மற்றும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த இடத்தை கையகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுகாலம் கடந்தபின் எங்களை காலி செய்யச்சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம். மேலும் நாங்கள் இந்த இடத்தை விலைகொடுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளோம். அனைத்துவிதமான வரிகளும் கட்டி வருகிறோம். இந்நிலையில் கோவில் நிர்வாகம் திடீரென இடத்திற்கு உரிமை கோரி வந்தால் ஏற்க முடியாது. எனினும் தங்கள் தரப்பை கோர்ட்டில் தெரிவித்து உரிய நிவாரணம்பெற அவகாசம் கேட்கவுள்ளதாக தெரிவித்தனர்.
அமினாவிடம் மனு
இதைத்தொடர்ந்து கோர்ட்டுஅமீனாவுடன் ஸ்ரீரங்கம்கோவில் இணைஆணையர் மாரியப்பன், வக்கீல்கள் சீனிவாசன், நாராயணன் மற்றும் கோவில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த குடியிருப்புவாசிகள் கோர்ட்டு அமினாவிடம், கோர்ட்டு உத்தரவை தற்போது நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கில் குடியிருப்புவாசிகளான தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என 44பேர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமினா இந்த மனுக்களை நீதிபதியிடம் கொடுத்து உரிய பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.