நெல்லையில் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம் திறப்பு


நெல்லையில் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம் திறப்பு
x

நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள மகளிர் பல்வேறு விதமான உற்பத்தி சார்ந்த பொருளாதார செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் மகளிரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்திடும் விதமாகவும், மாவட்ட அளவில் பூமாலை வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் அமையப் பெற்றுள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து மேம்படுத்தப்பட்டது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றினார்.

இந்த வளாகத்தில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி மற்றும் சந்தைப்படுத்தி உள்ளனர். புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் பனை ஓலை பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், பனங்கருப்பட்டி, கருவாடு வகைகள், பாக்கு மட்டைகள், ஆயத்த ஆடைகள், பத்தமடை பாய் பொருட்கள் மற்றும் பேன்சி பொருட்கள் என மொத்தம் 12 கடைகள் அமைக்கப்பட்டு விற்பனைக்காக பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.

நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம் நெல்லை தெற்கு புறவழிச்சாலை குறிச்சி சிக்னல் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கட்சியின் மூத்த நிர்வாகி குமார சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேயர் பி.எம்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட பொறுப்பாளருமான டி.பி.எம்.மைதீன்கான் வரவேற்றார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். கலைஞர் கூட்ட அரங்கத்தை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், வில்சன் மணித்துரை, பவுல்ராஜ், நித்திய பாலையா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதி சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story