பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைப்பு
கோத்தகிரி அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அந்த கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அந்த கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அரசு பள்ளி கட்டிடம்
கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் கேர்பெட்டா பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வக கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து காணப்பட்டது. அந்த கட்டிடத்தை அடிப்பகுதியில் உள்ள தூண்கள் மட்டுமே தாங்கி நின்றது.
இதனால் பள்ளி கட்டிடம் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காட்சி அளித்தது. மேலும் பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து, அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருந்தது. இதன் காரணமாக பழுதடைந்த கட்டிடம் வழியாக பள்ளி மாணவர்கள் நடந்து செல்லவே அச்சம் அடைந்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
மேலும் அந்த கட்டிடத்தின் அடிப்பகுதியில் மண் அரித்தது போல் காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்து வந்தனர். இதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அரசு பள்ளி கட்டிடத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதற்கிடையே கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது குறித்தும், உடனடியாக கட்டிடத்தைப் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 21-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கட்டிடத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் பணி நடைபெற்று நிறைவடைந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.