ஜம்புநாதேஸ்வரர் கோவில் திருப்பணி மும்முரம்
திருக்கோவிலூர் அருகே ஜம்புநாதேஸ்வரர் கோவில் திருப்பணி மும்முரம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே ஜம்பை கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த ஜம்புநாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத இக்கோவில் காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்தது. இதனால் கோவிலை புனரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளாததால் கிராம மக்கள் மற்றும் சிவபக்தர்கள் இணைந்து தனியார் பங்களிப்புடன் கோவில் திருப்பணிகளை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு தொடங்கி சிறு, சிறு பணிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதை ஏற்று ஜம்புநாதேஸ்வரர் கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் சேகர் பாபு ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது கோவில் திருப்பணிகள் மேலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோபுரம் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசும்பணி, சுற்றுப்பகுதியில் கல் புதைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு சில மாதங்களில் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதால் பொதுமக்களும், சிவ தொண்டர்களும், பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.