காகிதப்பட்டறை உழவர் சந்தை புனரமைக்கும் பணி தொடக்கம்
ரூ.42¾ லட்சத்தில் காகிதப்பட்டறை உழவர் சந்தை புனரமைக்கும் பணி தொடங்கியது.
உழவர் சந்தை
வேலூர் காகிதப்பட்டறையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு மேலகுப்பம், செங்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த உழவர் சந்தையில் 57 கடைகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த உழவர் சந்தை புதியதாக புனரமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, கடைகளின் மேற்கூரைகள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரூ.42¾ லட்சம்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 25 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.8 கோடியே 18 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காகிதப்பட்டறை உழவர் சந்தை ரூ.42 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் புரனமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை போன்ற சேதமடைந்த பகுதிகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும்.
இங்கு மாடுகள் உள்ளே வராத வகையில் கதவுகளும், சுற்றுச்சுவரின் உயரம் அதிகரித்தல், புதிதாக எடை எந்திரங்கள் வாங்குதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக அவர்களின் வியாபார நேரம் முடிந்த பின்னர் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.