உயிர்பலி வாங்க காத்திருந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு


உயிர்பலி வாங்க காத்திருந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு
x

தினத்தந்தி செய்தி எதிரொலியினால் உயிர்பலி வாங்க காத்திருந்த தடுப்புச்சுவரை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு சாலையின் நடுவே தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டது.

இதில் விழுப்புரத்தை அடுத்த சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நள்ளிரவில் லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியதில் அந்த தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்ததோடு அதிலுள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்தன. இதனை சரிசெய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியப்போக்குடன் இருந்ததால் அடிக்கடி சாலைஅகரம் பகுதியில் விபத்துகள் நடந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது ஒருவித அச்சத்துடனேயே சென்றனர்.

சீரமைப்பு

உயிர்பலி வாங்க காத்திருந்த அந்த தடுப்புச்சுவரை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 6-ந் தேதியன்று தினத்தந்தி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரமானது.

இதன் எதிரொலியாக தற்போது சேதமடைந்த அந்த தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளின் அச்சம் நீங்கி அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் இப்பகுதியில் எச்சரிக்கை பிரதிபலிப்பான்களை பொருத்த மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story