வீரணம்பட்டி காளியம்மன் கோவில் மீண்டும் திறப்பு


வீரணம்பட்டி காளியம்மன் கோவில் மீண்டும் திறப்பு
x

இருதரப்பினர் இடைேய உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வீரணம்பட்டி காளியம்மன் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் ஒன்றாக இணைந்து சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

ேகாவிலுக்கு சீல்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வீரணம்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து ஒரு தரப்பினரை கோவில் முன்மண்டபத்தின் உள்ளே அனுமதிப்பது சம்பந்தமாக கடந்த 7-ந்தேதி இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 8-ந்தேதி குளித்தலை கோட்டாட்சியர் இருதரப்பினரை யும்அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கோவிலின் 4 கதவுகளும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

உடன்பாடு

இதையடுத்து சீல்களை அகற்றி கோவிலை திறக்க வேண்டும் என ஒரு தரப்பினர் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் இருதரப்பினரையும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பாகுபாடுகள் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது.

கோவில் மீண்டும் திறப்பு

இதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலையில், குளித்தலை கோட்டாட்சியர் சோபா, கடவூர் தாசில்தார் முனிராஜ் ஆகியோர் காளியம்மன் கோவிலுக்கு வைத்த சீலை அகற்றினர். பின்னர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது.

தொடர்ந்து பட்டியலின மக்கள் உள்பட அனைவரையும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கோவில் முன்மண்டபத்திற்கு அழைத்து சென்றார். இதைத்தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் இருதரப்பினரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பேட்டி

பின்னர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து ஊர்களுக்கும் முன்மாதிரியாகவும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையிலும் வீரணம்பட்டி கிராமம் உள்ளது. இதனால் கிராம மக்களை பாராட்டும் வகையிலும், அவர்களின் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேலப்பகுதி ஊராட்சி வளர்ச்சிகளுக்காக குடிநீர் பணிகள், தெருவிளக்குகள், சிமெண்டு சாலைகள், ஓரடுக்கு கப்பி சாலைகள் ஆகிய பணிகளுக்காக ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஆகவே மேலப்பகுதி ஊராட்சி பகுதிகள் பாகுபாடுகள் இல்லாமல் இனி அமைதியான கிராமமாக உருவெடுக்க வேண்டும், என்றார்.

அப்போது, மேலப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.


Next Story