குங்கிலியநத்தம் ஏரியில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக சேதப்படுத்திய பகுதி சீரமைப்பு


குங்கிலியநத்தம் ஏரியில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக சேதப்படுத்திய பகுதி சீரமைப்பு
x
தினத்தந்தி 24 Jun 2023 3:00 PM IST (Updated: 24 Jun 2023 6:17 PM IST)
t-max-icont-min-icon

குங்கிலியநத்தம் ஏரியில் தண்ணீரை வெளியேற்ற சேதப்படுத்தப்பட்ட பகுதியை 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அதிகாரிகள் சீரமைத்தனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

குங்கிலியநத்தம் ஏரியில் தண்ணீரை வெளியேற்ற சேதப்படுத்தப்பட்ட பகுதியை 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அதிகாரிகள் சீரமைத்தனர்.

ஏரிகள் உடைப்பு

தண்டராம்பட்டு, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் வாணாபுரம் மழுவம்பட்டு, குங்கிலியநத்தம், தென்கரும்பலூர், கொட்டையூர், சதாகுப்பம், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, பழையனூர், நவம்பட்டு உள்ளிட்ட ஏரிகள் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் நிரம்பின.

ஏரி நிரம்பியதால் மழைக்காலம் வரும் வரை பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை வராது என விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் பல ஏரிகளில் மதகை உடைத்தும், கரைப்பகுதியை சேதப்படுத்தியும் தண்ணீரை வெளியேற்றும் சம்பவங்கள் நடந்தன. ஏரியில் மீன்வளர்க்க குத்தகை எடுத்தவர்கள் வளர்ந்த மீன்களை பிடிப்பதற்காக தண்ணீரை குறைய செய்து எளிதாக மீனகளை பிடிக்க இவ்வாறு செய்து இருப்பதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

குங்கிலியநத்தம் ஏரியில் தடுப்பு சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றப்பட்டு வருவது குறித்து 'தினத்தந்தி'யில் நேற்று படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.

இதன் எதிெராலியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக ஏரிக்கு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தண்ணீர் வெளியேறும்படி உடைக்கப்பட்ட சுவரை மண் மூட்டைகள் கொண்டு அடுக்கி ஏரியில் இருக்கும் தண்ணீர் வெளியேறாத வகையில் மூடினர். ஏரி சுவரை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வெளியேறுவதை தடுத்த அதிகாரிகளுக்கும் அதற்கு காரணமான செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story