தேரோடும் வீதியில் சீரமைப்பு பணி
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் ேதரோட்டத்தையொட்டி தேரோடும் வீதியை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
திருப்பத்தூர்,
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் ேதரோட்டத்தையொட்டி குண்டும், குழியுமாக காணப்பட்ட தேரோடும் வீதியை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கோவில்களில் பல்வேறு முன்னேற்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு கார், வேன், மோட்டார்சைக்கிளில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறும். இதில் சுவாமி தேரை பக்தர்களும், சண்டிகேசுவரர் தேரை முழுக்க, முழுக்க பெண்களே இழுத்து வருவார்கள். கடந்த 2ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. அப்போது தேரோட்டம் நடக்கவில்லை.
சாலை சீரமைக்கும் பணி
இதனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வருகிற 30-ந் தேதி மீண்டும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி கோவிலை சுற்றி 4 ரத தேரோடும் வீதிகளில் உள்ள தார்சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்பட்டது.
இந்நிலையில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஆய்வாளர்கள் சாத்தையா, சிவ சுப்பையா ஆகியோர் தலைமையில் சாலை பணியாளர்கள் ரோடு ரோலர் எந்திரம் கொண்டு கோவிலை சுற்றி தேரோடும் வீதி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மின்விளக்கு அலங்காரம்
இதுதவிர முக்கியமான இடங்களில் புதிதாக தார் ஊற்றப்பட்டு சாலைகளை போடும் பணியையும் மேற்கொண்டனர். இதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கோவிலில் முகப்பு தோற்றம் மற்றும் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணிக்காக கம்புகளை கொண்டு உயர் கோபுரங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது விழா களைக்கட்ட தொடங்கி உள்ளது.