ரூ.18 கோடி நிதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை 3 மாதத்தில் முடிக்க திட்டம்


ரூ.18 கோடி நிதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை 3 மாதத்தில் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:45 PM GMT)

ரூ.18 கோடி நிதியில் நடைபெற்று வரும் பாம்பன் ரோடு பாலத்தின் சீரமைப்பு பணிகளை இன்னும் 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ரூ.18 கோடி நிதியில் நடைபெற்று வரும் பாம்பன் ரோடு பாலத்தின் சீரமைப்பு பணிகளை இன்னும் 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இந்த ரோடு பாலம் 1973-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்தது. 1988-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் சாலை போக்குவரத்துக்கு இந்த ரோடு பாலம் திறக்கப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு பாலத்தில் சாலை போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்தை சீரமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் ரூ.18 கோடி நிதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. இந்த சீரமைப்பு பணியில் கடலுக்குள் அமைந்துள்ள 79 தூண்களிலும் உப்பு காற்றால் சேதமடைந்த தூண்களில் அந்த கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு ரசாயனம் கலந்த கலவைகள் மூலம் பூச்சு வேலை நடைபெற்று வருகின்றது.

வடமாநில தொழிலாளர்கள்

ரோடு பாலத்தில் தடுப்புச் சுவர் மற்றும் தூண்களிலும் வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த சீரமைப்பு பணியானது மும்பையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் நடைபெறுகிறது.

இந்த பாம்பன் ரோடு பாலத்தின் சீரமைப்பு பணியில் வட மாநிலத்தை சேர்ந்த 50-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் பாம்பன் ரோடு பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவர்களில் கம்பிகள் அமைத்து அந்த கம்பிகளில் நின்று மிகவும் பாதுகாப்பாகவும், சாதுர்யத்துடனும் வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கயிறை பிடித்து தொங்கியபடியும் வர்ணம் பூசும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.

3 மாதத்தில்

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கடலுக்குள் 79 தூண்களை கொண்டு அமைந்துள்ள ரோடு பாலத்தில் இதுவரையிலும் 59 தூண்களில் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து வர்ணம் பூசும் பணிகளும் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள தூண்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் 3 மாதத்தில் இந்த சீரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 விதமான வர்ணம் ரோடு பாலத்தில் பூசப்பட்டு வருகின்றன. தடுப்புச் சுவரில் மஞ்சள் நிற வர்ணமும், தூண்களில் ஊதா நிற வர்ணமும், தடுப்புச்சுவர் மற்றும் தூண்களுக்கும் இடைப்பட்ட அடிப்பகுதியில் அரக்கு நிற வர்ணமும் பூசப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story