தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலையில் துளிர்விட்டு வளர்ந்து வரும் மறுநடவு செய்த மரங்கள்
தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மறுநடவு செய்த மரங்கள் துளிர்விட்டு நன்கு வளர்ந்து உள்ளது.
பாவூர்சத்திரம்:
தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மறுநடவு செய்த மரங்கள் துளிர்விட்டு நன்கு வளர்ந்து உள்ளது.
நான்கு வழிச்சாலை பணி
நெல்லை-தென்காசி -கொல்லம் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிபடுத்தும் பணி ரூ.254 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II, தென்காசி கோட்டத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் 48 பாலங்களை அகலப்படுத்துதல், பாவூர்சத்திரத்தில் ஒரு ரெயில்வே மேம்பாலம் மற்றும் பாதசாரிகள், இலகுரக வாகனங்கள் கடந்து செல்ல சுரங்க நடைபாதை அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த சாலையில் முக்கியமான 29 சந்திப்புகளை மேம்படுத்தவும், 23 பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் கட்டப்படவும் உள்ளது. இந்த பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.
மரங்கள் அகற்றம்
நெல்லை - தென்காசி நெடுஞ்சாலை பணியின்போது ஆலங்குளம்-நெல்லை சாலையோரத்தில் இருந்த மரங்களை ஒப்பந்ததாரர்கள் வேரோடு வெட்டினா். சுமார் 70 வருடத்திற்கும் மேலாக வளர்ந்து வந்த மரங்களை மொத்தமாக வெட்டியதால் வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வந்தனர்.
இதன் எதிரொலியாக ஆலங்குளம் - தென்காசி சாலையில் உள்ள மீதமுள்ள மரங்களை வேரோடு பிடுங்கி சாலை ஓரமாக நடுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலை துறை திட்ட மேலாளர் ஹோசிமின் தலைமையில் மரங்களை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர்...
கோடைகாலம் என்பதால் மரங்களை பராமரிக்க ஆலங்குளத்தை சேர்ந்த அசுரா இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆலங்குளம் - அத்தியூத்து வரையிலான சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்களுக்கு ஆலங்குளத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் உதவியுடன் வாரம் இருமுறை தண்ணீர் ஊற்றினர். இதனால் பட்டுப்போகும் நிலையில் இருந்த மரங்கள் அனைத்தும் மீண்டும் துளிர்க்க தொடங்கியது. சுமார் 4 மாதங்கள் பராமரித்ததால் ஏராளமான மரங்கள் நன்றாக வளர்ந்து உள்ளது.
இதுகுறித்து அறிந்த திட்ட மேலாளர் ஹோசிமின் அசுரா இளைஞர்களை அழைத்து மரங்கள் பராமரிப்பு செலவினை நெடுஞ்சாலை துறை பார்த்துக் கொள்ளும் என்று உறுதியளித்தார். அதன்படி டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடித்து நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை பராமரித்து வருகின்றனர்.
10 மரங்கள் நடுவோம்
இதுகுறித்து திட்ட மேலாளரிடம் கேட்டபோது, தென்காசி-நெல்லை நான்குவழிச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இவற்றில் 1,228 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு மறுநடவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான மரங்கள் உயிர் பெற்றுள்ளது. இதுபோக பட்டுப்போகும் மரங்களுக்கு பதிலாக 1 மரத்திற்கு 10 மரங்கள் வீதம் நடுவது என முடிவெடுத்துள்ளோம் என கூறினார்.