வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு:மக்களுக்கு பேரிடியை தரும் 'ரெப்போ' வட்டி விகித உயர்வு


வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு:மக்களுக்கு பேரிடியை தரும் ரெப்போ வட்டி விகித உயர்வு
x

வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு: மக்களுக்கு பேரிடியை தரும் ‘ரெப்போ' வட்டி விகித உயர்வு குறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-

கிருஷ்ணகிரி

ஏழை-எளிய நடுத்தர மக்கள் வங்கிகளின் கடன் தவணைத்தொகை மூலமாகவே வீடு, வாகனம் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

ரெப்போ வட்டி விகித உயர்வு

மாத சம்பளத்தில் பெரும்பாலான தொகையை இதற்கான பட்ஜெட்டுக்காக ஒதுக்குகின்றனர். இப்படி பட்ஜெட் போட்டு ஆசை வாழ்க்கையை வாழும் பலருக்கு ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகித உயர்வு பேரிடியாக அமைந்திருக்கிறது.

'ரெப்போ' என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது. இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக்குழு தான் இந்த ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்து வருகிறது. அந்தவகையில் 6 பேர் கொண்ட இந்த குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பித்துக்கொள்ளும்.

6 .50 சதவீதம்

அதன்படி, இந்த குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் குழுவின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், தற்போது 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி வகிதம் 6.50 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 5.75 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 4 சதவீதத்துக்கு வந்தது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருந்தது. அதன் பின்னர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தின் பக்கம் கவனத்தை திருப்பியது. இதன் தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியது.

கூடுதல் தவணைத் தொகை

தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து, தற்போது 6.50 சதவீதத்துக்கு வந்துள்ளது. வட்டி விகித உயர்வால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் தவணைத் தொகை செலுத்த நேரிடும். உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் தவணைத் தொகையில் வாங்கி இருக்கும் தனி நபரின், தவணைத்தொகை குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்களுக்கு வீடு, வாகனம் கடன் தவணைத்தொகை உயருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-

சிரமத்தை கொக்கும்

இதுபற்றி பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள். இந்த நடவடிக்கையால் ஓரளவுக்கு பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் ரெப்போ வட்டி உயர்வு கடன் வாங்கியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். ஒரு காலாண்டு காலத்துக்கு பொறுத்து இருந்து நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால், வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கலாம். இடைப்பட்ட காலத்துக்குள் 6 முறை உயர்வு என்பது, வங்கியாக இருக்கட்டும், தனிநபராக இருக்கட்டும் அவர்களுடைய நிர்வாக கணக்குகளை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதே போக்கு நீடிக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்' என்றார்.

குருவி தலையில் பனங்காய்

தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் கே.மாரியப்பன் கூறும்போது, 'தொடர் ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்த வட்டி விகிதமான 6.25 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தட்டுதடுமாறி, மீண்டும் வங்கி கடன்களின் உதவியுடன் தொழில்களை நடத்துவதற்கு சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில், 2.50 சதவீதம் கூடுதல் வட்டி என்பது 'குருவி தலையில் பனங்காய்' வைத்தது போல் ஆகிவிடும். திடீர் திடீரென்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நிலையான கொள்கை முடிவு எடுக்காமல், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது மிகவும் மோசமான நடவடிக்கை. கடன் வழங்கும்போது என்ன வட்டி விகிதத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதற்கும் அதே வட்டி விகிதத்தில் வசூலிக்க வேண்டும். அப்போதுதான் சிரமம் இல்லாமல் இருக்கும்' என்றார்.

அதிர்ச்சியை தருகிறது

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆடிட்டர் கொங்கரசன் கூறுகையில், 'ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ ரேட் விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் உயர்த்தி ஒப்புதல் அளித்துள்ளார்கள். இதன் மூலம் வங்கி கடன்களுக்கான வட்டி மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் வீடு, வாகன கடன் தவணை தொகையும் உயருகிறது. இதனால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இன்று வங்கியில் கடன் பெற்று தான் வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது, இன்னும் பிற தொழில்களை மேற்கொண்டு வருகிறார்கள். வட்டி விகித உயர்வால் தவணை தொகையும் உயருகிறது. இதனால் திட்டமிட்டு செலவு செய்து வரும் பலருக்கு இது அதிர்ச்சியை தான் தருகிறது' என்றார்.

மறுபரிசீலனை

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு-கல்வி நிறுவன பயிற்சி மையம் நடத்தி வரும் எஸ்.ராஜ்குமார் கூறுகையில்,'நான் வங்கியில் கடன் பெற்று கார் வாங்கி உள்ளேன். இதற்கான தொகையை மாதந்தோறும் தவணையாக செலுத்தி வருகிறேன். தற்போது கடன் தவணை தொகை உயருவது என்ற அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பொதுவாக வங்கியில் கடன் பெறுபவர்கள் எப்போது கடன் தொகை முடியும் என நினைப்பார்கள். மேலும் மாத சம்பளம் பெறுபவர்களும், கடன் தொகை இவ்வளவு செலுத்த வேண்டும் என ஒவ்வொரு வீட்டிலும் மாத பட்ஜெட்டில் எடுத்து வைத்து கொள்வார்கள். அவர்கள் கூடுதலாக தவணை தொகை செலுத்தும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே வட்டி சதவீத உயர்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.

சிரமம் குறைந்தது

ஓசூரை சேர்ந்த நிதி ஆலோசகரும், ஆடிட்டருமான பி.பாலசுந்தரம் கூறுகையில்,'இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரப்போகிறது. 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, மற்ற வங்கிகளும் அவர்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். தற்போதைய விலைவாசி ஏற்றத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மாதாந்திர தவணை தொகையை அதிகரித்தால் நடுத்தர மக்களுக்கு மிகவும் பேரிடியாக இருக்கும். குறிப்பாக மாத சம்பளம் பெறுபவர்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை தரும். மாதம் ரூ.5 ஆயிரம் தவணை செலுத்துபவர், இப்போது கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த தொகையை தானாக சம்பளத்தில் இருந்து எடுக்கப்பட்டு விடும். இதன் மூலம் மற்ற செலவுகளை கண்டிப்பாக குறைத்து கொள்ள வேண்டும். இதை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அதை செய்ய வேண்டும். வட்டி விகிதத்தை குறைத்தால் மக்களின் சிரமம் குறையும்' என்றார்.

பெரிய பாதிப்பு

வேப்பனப்பள்ளியை சேர்ந்த வித்யா கூறுகையில்,'கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் தான், வங்கிகளில் கடன் வாங்கி தேவைகளை பூர்த்தி செய்கிறோம். அவ்வாறு வாங்கும் கடன்களை செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயித்து பயணிக்கும் போது, இப்போது தவணைத்தொகை உயர்த்துவது என்பது ஏற்க முடியாது. இதனால் என்னை போன்ற நடுத்தர மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். கொரோனாவில் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வரவில்லை. இந்த நேரத்தில் வங்கி கடன் வட்டி உயர்வு அறிவிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது' என்றார்.


Next Story