மக்களுக்கு பேரிடியை தரும் 'ரெப்போ' வட்டி விகித உயர்வு


மக்களுக்கு பேரிடியை தரும் ரெப்போ வட்டி விகித உயர்வு
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு வீடு, வாகனம் கடன் தவணைத்தொகை உயருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-

தேனி

ஏழை-எளிய நடுத்தர மக்கள் வங்கிகளின் கடன் தவணைத்தொகை மூலமாகவே வீடு, வாகனம் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

ரெப்போ வட்டி விகித உயர்வு

மாத சம்பளத்தில் பெரும்பாலான தொகையை இதற்கான பட்ஜெட்டுக்காக ஒதுக்குகின்றனர். இப்படி பட்ஜெட் போட்டு ஆசை வாழ்க்கையை வாழும் பலருக்கு ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகித உயர்வு பேரிடியாக அமைந்திருக்கிறது.

'ரெப்போ' என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது. இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக்குழு தான் இந்த ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்து வருகிறது. அந்தவகையில் 6 பேர் கொண்ட இந்த குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பித்துக்கொள்ளும்.

6.50 சதவீதம்

அதன்படி, இந்த குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் குழுவின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், தற்போது 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி வகிதம் 6.50 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 5.75 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 4 சதவீதத்துக்கு வந்தது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருந்தது.

அதன் பின்னர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தின் பக்கம் கவனத்தை திருப்பியது. இதன் தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியது.

கூடுதல் தவணைத்தொகை

தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து, தற்போது 6.50 சதவீதத்துக்கு வந்துள்ளது. வட்டி விகித உயர்வால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் தவணைத் தொகை செலுத்த நேரிடும்.

உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் தவணைத் தொகையில் வாங்கி இருக்கும் தனி நபரின், தவணைத்தொகை குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்களுக்கு வீடு, வாகனம் கடன் தவணைத்தொகை உயருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-

சிரமத்தை கொடுக்கும்

இதுபற்றி பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள். இந்த நடவடிக்கையால் ஓரளவுக்கு பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் ரெப்போ வட்டி உயர்வு கடன் வாங்கியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். ஒரு காலாண்டு காலத்துக்கு பொறுத்து இருந்து நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால், வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கலாம். இடைப்பட்ட காலத்துக்குள் 6 முறை உயர்வு என்பது, வங்கியாக இருக்கட்டும், தனிநபராக இருக்கட்டும் அவர்களுடைய நிர்வாக கணக்குகளை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதே போக்கு நீடிக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்' என்றார்.

'குருவி தலையில் பனங்காய்'

தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் கே.மாரியப்பன் கூறும்போது, 'தொடர் ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்த வட்டி விகிதமான 6.25 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தட்டுதடுமாறி, மீண்டும் வங்கி கடன்களின் உதவியுடன் தொழில்களை நடத்துவதற்கு சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில், 2.50 சதவீதம் கூடுதல் வட்டி என்பது 'குருவி தலையில் பனங்காய்' வைத்தது போல் ஆகிவிடும். திடீர் திடீரென்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நிலையான கொள்கை முடிவு எடுக்காமல், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது மிகவும் மோசமான நடவடிக்கை. கடன் வழங்கும்போது என்ன வட்டி விகிதத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதற்கும் அதே வட்டி விகிதத்தில் வசூலிக்க வேண்டும். அப்போதுதான் சிரமம் இல்லாமல் இருக்கும்' என்றார்.

ஏமாற்று வேலை

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணை செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறும்போது, 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகித உயர்வு என்பது ஏமாற்று வேலை. பணவீக்கத்தை குறைக்க பல்வேறு நிலைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஆனால் அதை இப்போது செய்வார்களா? என்பது கேள்விக்குறிதான். தற்போதைய ரெப்போ வட்டி விகித உயர்வால் நடுத்தர மக்களுக்குதான் சுமை அதிகரித்து இருக்கிறது. ஆனால் இந்த வட்டி விகித உயர்வால், கார்ப்பரேட் கடன்களுக்கு உயர்வு இல்லை என்பதுதான் வேடிக்கை. இதனால் கார்ப்பரேட் நிறுவனம் வளருகிறது. சாதாரண மக்கள் வேதனைப்படுகிறார்கள். ஏற்கனவே கடன் வாங்கும் சக்தியே இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, வங்கி கடன் உயர்வு பாதிப்பைத்தான் கொடுக்கும்' என்றார்.

குறைக்க வேண்டும்

கம்பத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சரவணன் கூறுகையில், 'கொரோனா கால பாதிப்புகளில் இருந்து தற்போது தான் தொழில்கள் மீண்டு வருகின்றன. மீண்டும் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வட்டி விகிதம் உயர்வு அமைந்துள்ளது. ஏற்கனவே கடன் வாங்கி தவணை தொகை செலுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த வட்டி விகிதம் அமலாகும். இதனால், திட்டமிட்டதை விடவும் கூடுதல் வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். சிறு, குறு தொழில்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இது பெரும் சுமையாகவே இருக்கும். கடனுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் சேமிப்பு, வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இல்லை' என்றார்.

உத்தமபாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி கற்பகம் கூறுகையில், 'விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் வீட்டுக்கடன், வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு அதிர்ச்சியை அளிக்கிறது. பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிச்சயம் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே கடன் வாங்கி தவணைத் தொகை செலுத்துபவர்களும், புதிதாக கடன் வாங்குபவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதே நிலை நீடித்தால், ஏழை, நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்பது எல்லாம் வாழ்நாள் கனவாகவே போய்விடும். ரெப்கோ வட்டி விகித உயர்வை குறைக்க வேண்டும்' என்றார்.

உப்புக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி அன்பழகன் கூறும்போது, 'வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை கொடுக்கும். ஏற்கனவே வாங்கிய கடனுக்கு மாத தவணை செலுத்தி வரும் மக்கள், தங்கள் மாத வருமானத்தில் அதற்கென பட்ஜெட் போட்டு வைத்திருப்பார்கள். வட்டி விகிதம் உயர்வால் ஒவ்வொரு மாத தவணை தொகையும் உயரும். இது நடுத்தர குடும்பங்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையாக இருக்கும்' என்றார்.


Related Tags :
Next Story