ராகுல்காந்தி மீது தொடுக்கப்படும் அடக்கு முறையைபொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தொடர் போராட்டம் நடத்தப்படும்சிறுவை ராமமூர்த்தி பேட்டி
ராகுல்காந்தி மீது தொடுக்கப்படும் அடக்கு முறையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று சிறுவை ராமமூர்த்தி தெரிவித்தார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஆர். டி. வி.சீனிவாச குமார் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மாநிலத்தில வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு தற்போது விரைவாக விசாரிக்கப்பட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டு, அவர் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்கள்.
இவை அனைத்தும், தானாக நடந்த மாதிரி தெரியவில்லை. திட்டமிட்டு பழிவாங்கும் போக்கு என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினால் அதை விவாதிக்க மத்திய அரசு மறுக்கிறது. எனவே மக்கள் மன்றத்தில் எடுத்து செல்ல காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது, நடத்தவும் உள்ளது.
ராகுல் காந்தி மீது தொடுக்கப்படும் அச்சுறுத்தலை தடுக்கும் விதமாகவும், அவர் மீது தொடுக்கப்படும் அடக்கு முறையை பல்வேறு போராட்ட நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே எடுத்து செல்வோம் என்றார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் குலாம் மொய்தீன், நகரத் தலைவர் செல்வராஜ், நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், பூந்தோட்டம் விசுவநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.