நாமக்கல்லில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


தினத்தந்தி 26 Jan 2023 7:28 PM GMT (Updated: 27 Jan 2023 10:02 AM GMT)

நாமக்கல்லில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசிய கொடி ஏற்றி ரூ.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்

குடியரசு தின விழா

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், வெண்புறாக்களையும், பல்வேறு வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார். பின்னர் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார்.

முதல்-அமைச்சர் பதக்கங்கள்

அதன் பிறகு 44 போலீசாருக்கு முதல்- அமைச்சரின் பதக்கங்களையும், 35 போலீசாருக்கு நற்சான்றிதழ்களையும், பேண்ட் வாத்திய குழுவை சேர்ந்த 23 போலீசாருக்கு கேடயங்களையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். மேலும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 173 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ.59.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். அதைத்தொடர்ந்து கலை பண்பாட்டு துறையின் சார்பில் 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான காசோலைகள், பொற்கிழி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்

மேலும் நாட்டுப்புற கலைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில் கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால், சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் 7 பள்ளிகளை சேர்ந்த 682 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முழுமை திட்ட இயக்குனர் சிவகுமார், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள் மொழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story