அரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்


அரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்
x

சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை,

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிடப்பட்டது. பின்னர் தேசிய மாணவர் படை, சாரண-சாரணியர் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

இந்த விழாவில் மாநகராட்சிக்கு அதிகளவில் சொத்துவரி வழங்கியவர்கள் மற்றும் தாமதமின்றி சொத்துவரி செலுத்தி வருவோரை மேயர் பிரியா பாராட்டி கடிதம் வழங்கினார். பின்னர் மாநில குடும்பநல இயக்கம் சார்பில் குடும்ப நல திட்டப்பணிகளில் சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவ அதிகாரிகள், நகர்ப்புற சுகாதார நர்சுகள், குடும்ப நல ஆலோசர்களுக்கு கேடயத்தையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். மேலும் முன்மாதிரியாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள் 100 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநில தேர்தல் ஆணையம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கே.விவேகானந்தன், முதன்மை தேர்தல் அதிகாரிகள் கே.வரதராஜன், கு.தனலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமிர்தஜோதி தேசிய கொடி ஏற்றினார். அதனைத்தொடர்ந்து நடந்த விழாவில் பத்மஸ்ரீ விருதுபெற்ற சமூகசேவகர் பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

சென்னை மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் தேசிய கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றோருக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தேசிய கொடி ஏற்றினார். அதனைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து பணியாளர்கள் 134 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு பொருட்களை அவர் வழங்கினார்.

எழிலக வளாகம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துணைவேந்தர் உமா சங்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.

சென்னை அண்ணாநகர் மஸ்ஜித் ஜாவித் நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகத்தின் தலைவர் எல்.கே.எஸ்.செய்யது அகமது தேசிய கொடி ஏற்றினார்.

தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தேசிய கொடி ஏற்றினார். அதனைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரின் (ஆர்.பி.எப்.) அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். முதன்மை பாதுகாப்பு கமிஷனர் ஜி.எம்.ஈஸ்வர ராவ், சென்னை கோட்ட மேலாளர் கணேஷ், நிர்வாக அதிகாரி வி.கே.குப்தா, திட்ட இயக்குனர் சமீர் திகே, தொழிற்பேட்டை மேலாளர் என்.கே.நந்தன்வார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குடியரசு தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை நேற்று மதியம் பாரம்பரிய ரெயில் இயக்கப்பட்டது. இதனை ஏராளமான பயணிகள் பார்த்து ரசித்தனர்.

ஜி.எஸ்.டி. பவன்

ஜி.எஸ்.டி. பவனில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்நாடு-புதுச்சேரி கமிஷனர் மாண்டலிகா சீனிவாஸ் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் வி.சி.அசோகன், அரசு கணக்கியல் தரநிலைகள் ஆலோசனை வாரியத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஆடிட்டர் ஜெனரல் கே.சீனிவாசன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நடந்த விழாவில் நிறுவன மேலாளர் ஏ.கே.தாஸ் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.


Next Story