வடமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை
வடமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பையாவிடம் கொடுத்தனர். அந்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களை கணக்கெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை குறைத்து ஒப்பந்த பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு சீட்டு முறையினை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காவல் கண்காணிப்பு குழு அமைத்து வடமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.