ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் கூடுதலாக சமையலர் பணியிடம் ஒதுக்கிட வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் கூடுதலாக சமையலர் பணியிடம் ஒதுக்கிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பெரம்பலூரில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாறன், மகளிர் அணி செயலாளர் மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் நிறுவனர் தங்கவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நிரந்தர அலுவலரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். 2½ ஆண்டுகளுக்கு முன்பு விடுதிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 27 சமையலர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும். விடுதிகளில் சமையலர்கள், காவலர்களாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு சிறப்பு நிலையும், 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு மிகவும் சிறப்பு நிலையும் உடனடியாக வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக நியமிக்க வேண்டும். சமையலர் மற்றும் காவலர்களின் பணிமூப்பு பட்டியலை உடனே வெளியிட்டு காலியாக உள்ள காவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப பணி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள 4 கல்லூரி விடுதிகளுக்கும் கூடுதலாக தலா ஒரு சமையலர் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.