மழைநீர் வரத்து வாய்க்கால் அமைக்க கோரிக்கை
மழைநீர் வரத்து வாய்க்கால் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் நகரின் மைய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது. இதன் அருகிலேயே வண்ணான் குட்டை உள்ளது. ஜெயங்கொண்டம் சாலையின் இருபுறமும் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாய்க்கால்கள் மூலம் இந்த குட்டைக்கு நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் பல கட்டங்களில் நடந்தபோது வாய்க்கால்கள் மூடப்பட்டு சிமெண்டு தளம் அமைக்கப்பட்டதால், அந்த குட்டைக்கு மழைநீர் வரத்து இல்லை. இதனால் சலவை தொழிலாளர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். தூர்ந்து கிடந்த அந்த குட்டையை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தூர்வாரி சுற்றிலும் சிமெண்டு தளம் அமைத்து நகராட்சி அழகுபடுத்தியது.
ஆனால் நீர் வருவதற்கான எந்த பாதையையும் உருவாக்கவில்லை. குட்டைக்கு நீர் வராமல் இருப்பதால், அங்கு மாணவர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் அந்த குட்டை குப்பை கொட்டும் இடமாகவும் திறந்தவெளி மது அருந்தும் கூடமாகும் மாறிவிட்டது. தற்போது பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு, தரைத்தளங்களை பெயர்த்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே மழை பெய்யும்போது பஸ் நிலையத்தில் வழிந்து ஓடும் மழை நீர் வண்ணான் குட்டைக்கு செல்வதுபோல் ஒரு வரத்து வாய்க்கால் அமைத்து தர வேண்டும். குட்டையில் உள்ள முட்புதர்களை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்து, அங்கு நீர் வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.