சிறு, சிறு கடைகள் கட்டி தொழில் வாய்ப்பை ஏற்படுத்த கோரிக்கை
சிறு, சிறு கடைகள் கட்டி தொழில் வாய்ப்பை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகர மேம்பாலங்கள்
திருச்சி மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வணிக வளாகம் கட்டுதல், உடற்பயிற்சி கூடங்களுடன் கூடிய பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகள் நிறைவுபெற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மாநகரை அழகுப்படுத்தும்விதமாக பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக பாலக்கரை மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்கா உரிய பராமரிப்பின்றி கிடக்கிறது. அங்குள்ள செடிகளில் தூசி படர்ந்தும், ஆங்காங்கே எச்சில் துப்பிய நிலையிலும் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. மேலும் ஒருசிலர் அங்கு அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோதிகளின் கூடாரமாகவே அந்த பகுதி மாறியுள்ளது.
சமூக விரோத செயல்கள்
மேலும், இந்த சமூகவிரோத கும்பலுக்கு போதை தலைக்கேறிய நிலையில் அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவிகளிடம் செல்போன் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். திருச்சி மாநகரத்தில் ஸ்ரீரங்கம், தென்னூர், பாலக்கரை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலங்களின் கீழ் ஆங்காங்கே மதுபாட்டில்கள் கிடக்கின்றன.
இந்த பாலங்களின் கீழ்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காரணத்தினாலேயே குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. பாலங்களின் கீழ்ப்பகுதியை அழகுபடுத்த பூங்காக்கள் அமைத்தால் அது விழலுக்கு இறைத்த நீர்போல் பயனற்று போய்விடுகிறது. மாறாக நகர பகுதிகளில் மேம்பாலங்களின் கீழுள்ள பகுதிகளில் சிறு, சிறு கடைகளை அமைத்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
மாநகராட்சிக்கு வருவாய்
அவற்றில் பாலத்தின் ஒரு பகுதியில் கடை வியாபாரிகளின் வாகனங்களை நிறுத்தி கொள்வதற்கும், அவர்களுக்கு கழிவறை கட்டி தருவதற்கும் இடம் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அந்த பகுதியில் பொதுமக்களின் புழக்கம் அதிகரிக்கும். பொதுக்கள் நடமாட்டம் இருந்தாலே தானாக சமூக விரோத செயல்களும் இல்லாமல் போய்விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படடால் மாநகராட்சிக்கும் வருவாய் பெருகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகள் முளைத்தன. அன்றாட பிழைப்பை ஓட்டுவதே பெரும்பாடாக மாறியது.
வாழ்வாதாரம் பாதிப்பு
தற்போது கொரோனா தொற்று முடிவுக்கு வந்து இயல்புநிலை திரும்பியுள்ளது. ஆனாலும் கொரோனாவால் இழந்த வாழ்வாதாரம் பலருக்கு மீண்டும் கிடைக்கவில்லை. தற்போதும் வருமானத்துக்கு வழியில்லாமல் தவித்து வருகிறார்கள். அதுபோன்ற சிறு வியாபாரிகளுக்கு மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ்பகுதிகளில் சிறு, சிறு கடைகள் அமைத்து கொடுத்தால் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். அதேநேரத்தில் சமூக விரோத செயல்களும் தடுக்கப்படும்.
ஏற்கனவே நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாலங்களின் கீழ் பயன்பாடு இல்லாமல் இருக்கும் இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறு, சிறு கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கூறினார். அதன்பிறகு அதுபோன்ற கட்டமைப்பை உருவாக்கக்கூடிய பணிகளை தொடங்கவில்லை. எனவே ஆண்டுக்கணக்கில் உபயோகத்தில் இல்லாத இடத்தை பயனுள்ளதாக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.