பெண் போலீசாருக்கு தங்கும் விடுதி கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்: போலீஸ் கமிஷனர் தகவல்


பெண் போலீசாருக்கு தங்கும் விடுதி கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்: போலீஸ் கமிஷனர் தகவல்
x

சென்னையில் பெண் போலீசார் தங்குவதற்கு விடுதி ஒன்று கட்டித்தருமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும், என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகர காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அனைத்து பெண் போலீசாருக்கும் ஆனந்தம் என்ற பெயரில் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன்பேரில் பணியிலும், சொந்த வாழ்க்கை முறையிலும் வெற்றி பெறும் வகையில் கடந்த 1 ஆண்டாக முதல் கட்ட பயிற்சி நடந்தது. வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் இந்த சிறப்பு புத்தாக்க பயிற்சி நடந்தது. முதல் கட்ட பயிற்சி முடிந்து விட்டது. அடுத்து 2-வது கட்ட பயிற்சி நேற்று முதல் தொடங்கியது.

முதல் கட்ட பயிற்சியின் முதலாம் ஆண்டு விழாவும், 2-வது கட்ட பயிற்சியின் தொடக்க விழாவும் நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடந்தது. போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் இந்த விழாவில் கலந்து கொண்டார். 2-வது கட்ட பயிற்சி முகாமை அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தங்கும் விடுதி

விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

பெண் போலீசார் தங்களது பணியிலும், சொந்த வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட இந்த பயிற்சி பயன் உள்ளதாக இருக்கிறது. பெண் போலீசார் தாங்கள் வாங்கும் சம்பளத்தை செலவிட்டு விடுவதாக சொல்கிறார்கள். அவர்களது சம்பளத்தில் சேமிப்பு இருக்க வேண்டும். இதற்கு நிதி மேலாண்மை பற்றி அவர்களுக்கு பயிற்சியில் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் பெண் போலீசார் திருமணம் ஆவதற்கு முன்பு தங்குவதற்கு வீடு போன்ற வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

எனவே வரும் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, சென்னையில் 200 பேர் அல்லது 400 பேர் தங்கும் அளவுக்கு பெண் போலீசாருக்கு விடுதி ஒன்றை கட்டித்தருமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் பெண் போலீசாருக்கு போதிய பயிற்சி கிடைப்பதில்லை. எனவே உரிய பயிற்சியாளர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி, துணை கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், ராமமூர்த்தி, சவுந்திரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான பெண் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story