4 ஆண்டுகளாக நடக்கும் எம்.சூரக்குடி ஊராட்சி அலுவலக கட்டிட பணி விரைந்து முடிக்க கோரிக்கை
4 ஆண்டுகளாக கட்டியும் எம்.சூரக்குடி ஊராட்சி மன்ற அலுவலக பணி நிறைவு பெறவில்லை. இந்த பணியை விரைந்து கட்டி முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிங்கம்புணரி
ரூ.17 லட்சம் மதிப்பீட்டில்
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எம்.சூரக்குடி ஊராட்சியில் உயர்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் என அரசு கட்டிடங்கள் உள்ளன. சமீபத்தில் எம்.சூரக்குடி ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்களிப்போடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டு தரம் சான்றிதழில் முதலிடம் பெற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரிடம் நற்சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எம்.சூரக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வேலை தொடங்கப்பட்டது. 4 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகள் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.
4 ஆண்டுகளாக...
தற்போது 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் ஊராட்சி மன்ற கட்டிட பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பல அலுவலக சான்றிதழ்கள், ஆவணங்கள் வைக்க இடம் இன்றி பணியாளர்கள் சிரமத்துக்குள் ஆகி வருகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர், பொதுமக்கள் கூறுகையில், 2019-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிடம் ஓராண்டில் முடிக்கப்பட வேண்டியது, ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் இன்றும் முடிக்கப்படாமல் உள்ளது. அருகிலுள்ள பல ஊராட்சிகள் அதே ஆண்டில் புதிய அலுவலக கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு முடிவுற்று புதிய கட்டிடத்தில் தங்கள் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட நுழைவாயில் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை முழுமை பெறாமலும், பின்புறம் உள்ள கழிப்பறை தொட்டி கட்டப்படாமலும், கட்டப்பட்ட நடைபாதை பள்ளம் ஏற்பட்டு உள்ளது. கட்டிடத்தின் பல பகுதிகள் முழுமை பெறாமலும் உள்ளது. எனவே கட்டிட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.