திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுகோள்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், பெரம்பலூரில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் (பொறுப்பு) சிவலிங்கம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆதிசிவம் கடந்த மாத வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். செயலாளர் மருதமுத்து பேசுகையில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவரும் அடுத்த மாதம் ஜூலை முதல் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் தங்களின் ஓய்வூதிய முக்கிய ஆவணங்களுடன் கருவூலத்துறை பொது இ-சேவை மையம், தலைமை அஞ்சலகத்துறை, அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும், என்றார். சங்கத்தின் வட்டார பொறுப்பாளர்கள், புதிய காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. 1.1.2022 அன்று முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி 3 சதவீதத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-ஊதியத்தை உடனடியாக அரசு வழங்கிட வேண்டும். 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக ஆக்காமல், அரசு காலி பணியிடங்களை கண்டறிந்து டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைந்து நிரப்பிட வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவக்குமார் நன்றி கூறினார்.