மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ரெயில்வே கேட்டை திறக்க கோரிக்கை


மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ரெயில்வே கேட்டை திறக்க கோரிக்கை
x

மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ரெயில்வே கேட்டை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

வைகாசி திருவிழா

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், லாலாபேட்டை அருகே கீழ சிந்தலவாடியில் புகழ் பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொேரானா ஊரடங்கு காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், 23-ந்தேதி (திங்கட்கிழமை) அக்னி தீச்சட்டி அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதனால் இப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மழைநீர் சூழ்ந்துள்ளது

மேலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்த காவிரி ஆற்றிலிருந்து புனித நீராடி அக்னிச்சட்டி, பறவை காவடி எடுத்து கொண்டு லாலாபேட்டை ரெயில்வே கேட் வழியாக தான் கீழ சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலுக்கு செல்வார்கள்.

தற்போது ரெயில்வே கேட் பூட்டப்பட்டுள்ளதால் தற்போது வரை குகை வழி ரெயில்வே பாதையைத்தான் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக மழை பெய்து வருவதால் குகைவழி பாதையை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் வர முடியாத சூழ்நிலை உள்ளது.

கோரிக்கை

எனவே பக்தர்கள் சிரமமின்றி தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டு லாலாபேட்டையில் மூடப்பட்டுள்ள ெரயில்வே கேட்டை திருவிழா நாட்களில் மட்டும் திறந்து மூடும் வகையில் வழிவகை செய்ய ரெயில்வே நிர்வாகத்திடம், மாவட்ட நிர்வாகம் பேசி ரெயில்வே கேட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story