சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு பஸ் இயக்க கோரிக்கை


சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு பஸ் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 1:00 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் சென்னைக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகங்கை

சிங்கம்புணரியில் சென்னைக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொழில் சார்ந்த பகுதி

சிங்கம்புணரி பேரூராட்சி பல்வேறு தொழில் சார்ந்த பகுதியாகும். இங்கு குடிசைத் தொழிலாக கயிறு தயாரிக்கும் தொழில்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. இதுபோல் தேங்காய் உரிக்கும் தொழில், எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட பலதரப்பட்ட தொழில்கள் சிங்கம்புணரி நகர் பகுதியில் நடைபெறுகிறது. மேலும் சிங்கம்புணரியை சுற்றிலும் விவசாயங்கள் நிறைந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் விவசாய பொருட்கள் வாங்குவதற்கு அனைத்து கிராம மக்களும் சிங்கம்புணரிக்குதான் வருகின்றனர். சிங்கம்புணரி பேரூராட்சியானது மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, போன்ற மாவட்டங்களில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

தனித்தாலுகா அந்தஸ்து

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சிங்கம்புணரி நகர் மற்றும் கிராம பகுதிகளை சுற்றி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு எஸ்.புதூர் ஒன்றியம் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்களை இணைத்து தனி தாலுகா அந்தஸ்து பெற்றது. இந்நிலையில் பல வருடங்களாக தனித்தாலுகா அந்தஸ்துக்கான எந்தவிதமான அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள், ஆஸ்பத்திரிகள் போன்ற எதுவும் விரிவாக்க பணிகளும் செய்யப்படவில்லை. குறிப்பாக அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. அதேபோல் சிங்கம்புணரி வட்டார போக்குவரத்துக்கழகம் இந்த பகுதியில் பணிமனை அமைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோரிக்கை

மேலும் சிங்கம்புணரியில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட சென்னை செல்லும் பஸ் இன்று வரை இயக்கப்படவில்லை. குறிப்பாக சிங்கம்புணரி வழியாக சுமார் 20-க்கும் மேற்பட்ட தனியார் பஸ் சென்னை செல்கின்றன. இதில் அதிக கட்டணம் வசூலிப்பதால் ஏழை மக்கள் மிகவும் பாதிப்படைகிறார்கள். சிங்கம்புணரியில் இருந்து நேரடியாக சென்னைக்கு அரசு பஸ்கள் இயக்கினால் தொழில் சார்ந்த மக்களுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றனர். எனவே சிங்கம்புணரியில் இருந்து நேரடியாக சென்னைக்கு குறைந்தபட்சம் 2 பஸ்களாவது இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story