விராலிமலை- கீரனூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
விராலிமலை-கீரனூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம மக்கள் அவதி
விராலிமலையில் இருந்து குளவாய்ப்பட்டி, முல்லையூர், ஆலங்குளம், நீர்பழனி வழியாக கீரனூருக்கு தினமும் அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்று வருகிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ் இயக்கப்படுவதால் விராலிமலை- கீரனூர் செல்லும் வழியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் பொழுது சரியான நேரத்திற்கு செல்ல முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் தனியார் பஸ் ஒன்று இயங்கிய நிலையில் கொரோனா முழு ஊரடங்கு பிறகு அந்த பஸ்சும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுவதால் காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பயணிகள் ஒரு சில நேரங்களில் படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
இவ்வாறு பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு செல்லும்போது தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு விராலிமலை-கீரனூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.