தக்காளியை சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
தக்காளியை சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தக்காளியை சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் பூமா முன்னிலை வகித்தார். வேலூர் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்துள்ளது. அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் விவசாயிகள் லாபம் பெறுவார்கள். தேவையில்லாமல் இடைத்தரகர்களுக்கு பணம் செல்லாது.
நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும்.
குளிர்சாதன கிடங்கு வசதி
முன்பெல்லாம் தக்காளி விலை குறைந்து காணப்பட்டது. அதனால் பலர் தக்காளியை சாகுபடி செய்யவில்லை. தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளது.
இனி வருங்காலங்களில் தக்காளிகளை இருப்பு வைத்து பயன்பெற வேளாண்மை விரிவாக்க மையத்தில் குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த வசதி இருந்தால் தக்காளிகளை அங்கு சேமித்து வைத்து தேவைப்படும் போது விற்பனை செய்ய முடியும்.
விவசாய பணிகளுக்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்த உதவி கலெக்டர் கவிதா, ''கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து அரசுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.