அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவையற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற கோரிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவையற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவையற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமாக பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் சில சமயங்களில் வெளி நாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்த கோவில் வளாகத்திற்குள் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அமமன் மட்டுமின்றி கம்பத்து இளையனார் சன்னதி, விநாயகர் சன்னதி, பாதாள லிங்கம், கால பைரவர் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகள் உள்ளனர்.
பக்தர்கள் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சாமி தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் அதே வழியாகவே பக்தர்கள் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் குழப்பம்
இக்கோவிலில் பெரும்பாலும் விழா நாட்களிலும், கோவிலில் கூட்டம் அதிகம் உள்ள நாட்களிலும் பக்தர்கள் முறையாக வரிசையாக செல்ல கோவில் வளாகத்தில் நகரும் இரும்பு கூண்டுகள் மற்றும் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்படும். ஆனால் சமீப நாட்களால் கோவிலில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பூட்டி வைக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று கம்பத்து இளையனார் சன்னதி அருகில் பக்தர்கள் வந்து செல்லும் பாதை இரும்பு கேட் மூலம் மூடப்பட்டு இருந்தது.
இதனால் ராஜகோபுரம் வழியாக வந்த பக்தர்களும், அவ்வழியாக செல்ல வந்த பக்தர்களும் எவ்வாறு உள்ளே செல்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர் உள்ளே செல்பவர்களும், வெளியே வருபவர்களும் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கூண்டு பாதை வழியாக ஒருவரை ஒருவர் இடித்த படி சென்றனர். இதேபோல் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளால் பக்தர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
தடுப்புகளை அகற்ற வேண்டும்
இந்த கோவிலை பொருத்தவரையில் அதிகளவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களே வருகை தருகின்றனர். அவர்கள் கோவிலை முழுமையாக சுற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணத்தில் கோவிலுக்கு வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகத்தில் காணும் இடம் எல்லாம் தடுப்புகள் அமைத்து உள்ளதால் பக்தர்கள் பெரும்பாலானோர் சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்து விட்டு கோவில் வளாகத்திற்குள் உள்ள முருகர், விநாயகர், கால பைரவர் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் அவற்றை தரிசனம் செய்யாமல் திரும்பி செல்கின்றனர். எனவே விழா நாட்களை தவிர மற்ற நாட்களில் கோவில் வளாகத்தில் தேவையற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.