மானாமதுரை வைகையாற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
மானாமதுரை வைகையாற்றில் படர்ந்து காணப்படும் கருவேல மரங்கள் மற்றும் நாணல் புதர்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை
மானாமதுரை வைகையாற்றில் படர்ந்து காணப்படும் கருவேல மரங்கள் மற்றும் நாணல் புதர்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகையாறு
தமிழகத்தின் தென் மாவட்டங்களாக உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், இந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது வைகையாறு. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து திறக்கப்படும் இந்த தண்ணீர் வைகையாற்றின் மூலம் மேற்கண்ட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருந்து வருகிறது. இதுதவிர மாவட்ட விவசாயிகளுக்கும், இங்குள்ள கிணற்று பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் இந்த வைகையாற்று பாசனம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.
கடந்தாண்டு மழைக்காலத்தில் அதிக அளவு மழை பெய்ததால் இந்த வைகையாற்றில் தண்ணீர் சுமார் 5 மாத காலமாக சென்றது. இதையடுத்து இந்த தண்ணீரை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி முதல்போக விவசாயத்தை செய்து முடித்தனர். இதுதவிர நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது.
கருவேல மரங்கள்
இந்நிலையில் மானாமதுரை பகுதி வைகையாற்றில் தற்போது கருவேல மரங்களும், நாணல் செடிகளும் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மானாமதுரை பகுதி பூர்வீக வைகை பாசன விவசாயிகள் கூறியதாவது:-
மானாமதுரை வைகையாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். ஆனால் அதனை பாதிக்கும் வகையில் வைகையாற்றுக்குள் கருவேல மரங்களும், நாணல் செடிகளும் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.
நடவடிக்கை வேண்டும்
இனிவரும் காலங்கள் மழைக்காலமாக உள்ளதால் அதற்கு முன்னதாகவே வைகையாற்றில் காணப்படும் இந்த நாணல் செடிகள் மற்றும் கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக உற்ற நண்பனாக இருந்து வரும் வைகையாற்றை பாதுகாக்க வேண்டியது பொதுப்பணித்துறையின் கடமை மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் இந்த வைகையாற்றில் மணல் வளத்தையும் பாதுகாக்க வேண்டும். வரும் மழைக்காலங்களுக்கு முன்பாக வைகையாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள் மற்றும் நாணல் புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த கருவேல மரங்களை முற்றிலும் அகற்றினால் மட்டுமே மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.