பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சி 7, 10, 11-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் துறைமங்கலம் குறிஞ்சி குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் நேற்று காலை நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆணையாளர் ராமரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, துறைமங்கலம் கே.கே.நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுச்சுவர் வழியாக பொதுப்பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாக துறைமங்கலம் கே.கே.நகர், புதுக்காலனி, வடக்கு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசு நகர்ப்புற மருத்துவமனை, மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், கால்நடை மருத்துவமனை, புதிய பஸ் நிலையத்துக்கு சென்று வந்தோம். தற்போது அந்த பாதையை அருகே உள்ள ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.