மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க கோரிக்கை


மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
x

தேங்காய் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் தென்னை விவசாயத்தை பாதுகாக்க மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

தேங்காய் விலை வீழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை விவசாயம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. நீண்ட கால பயிரான தென்னை விவசாயத்தை நம்பி விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். லாபகரமான தொழிலாக விளங்கி வந்த தென்னை விவசாயம் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தேங்காய் விலை வீழ்ச்சி தான். முன்பு தேங்காய் விலை சராசரியாக இருந்ததால் பலரும் தென்னை விவசாயத்திற்கு மாறினர்.

போதுமான தண்ணீர் வசதி இல்லாவிட்டாலும், பராமரிப்பு செலவு குறைவு என்பதால் இந்த விவசாய தொழில் விவசாயிகளுக்கு ஓரளவு லாபகரமாக இருந்தது. தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டமடைய தொடங்கியதால் இத்தொழிலையும், தென்னை விவசாயத்தையும் பாதுகாக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-

தேங்காய் எண்ணெய்

தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் செல்லதுரை:- "தேங்காய் விலை வீழ்ச்சி, தென்னை விவசாயம் பாதிப்பு, கொப்பரை தேங்காய் தொடர்பான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சமீபத்தில் விவசாயிகள் குழுவினர் நாங்கள் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தோம். கொப்பரை தேங்காய்களை மாநில அரசின் வேளாண்மை துறை மூலம் மத்திய அரசு கொள்முதல் செய்து ஏலமிடுகிறது. இதில் குறைந்த விலைக்கு ஏலம் போகிறது.

இதனை மாநில அரசு கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய்யாக மாற்றலாம். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் மத்திய அரசு கொள்முதல் செய்ததில் 80 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் சேமிப்பு கிடங்குகளில் உள்ளது. இதனை எண்ணெய்யாக மாற்றினால் 4 கோடி லிட்டர் கிடைக்கும். இதனை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கலாம். பாமாயில் இறக்குமதிக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அரசு மேற்கொண்டு ரேஷன் கடைகளில் வினியோகிக்கலாம். மத்திய அரசால் இயக்கப்படும் தென்னை வளர்ச்சி வாரியம், தலைவர் இல்லாமல் உள்ளது. இதில் தலைவராக விவசாயியை நியமிக்கப்படுவார் என அறிவித்ததை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும்.''

கொள்முதல் நிலையங்கள்

கொத்தமங்கலம் விவசாய சங்க துணை தலைவர் சித்திரவேல்:- "ஒவ்வொரு ஆண்டும் தேங்காய் விலை சரிவையே சந்தித்து வருவதால் தென்னை விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை கொள்முதல் செய்து வினியோகித்தால் ஓரளவுக்கு தேங்காய் விலை உயர்வுக்கு வழி வகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் 3 மாத காலங்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனை ஆண்டு முழுவதும் செயல்படுத்தி விவசாயிகளிடம் இருந்து மட்டுமே கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் நிறைய இடங்களில் அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்''

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்

கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விஷ்வ ராம்குமார்:- "ஒரு காலத்தில் நெல் விவசாயம் செய்து வந்த நிலையில் தென்னை விவசாயத்திற்கு பலர் மாறினர். ஆனால் தற்போது தென்னை விவசாயத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்தது. ஒரு தேங்காய் விலை சராசரியாக ரூ.7 வீதம் விவசாயிகளிடம் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனை அவர்கள் கூலி, வாகன வாடகை என செலவுகளை நிர்ணயம் செய்து ஒரு விலையை வைத்து கடைகளில் விற்கின்றனர்.

வியாபாரிகளுக்கு லாபகரமாக இருந்தாலும், விவசாயிகளுக்கு இந்த தொழில் தற்போது நஷ்டமடைய செய்கிறது. தென்னை விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் சத்துணவு திட்டத்தில் தேங்காய் பயன்படுத்த வேண்டும். தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், தேங்காயை அரசு கொள்முதல் செய்து வினியோகிக்கலாம். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்கலாம்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தில் உள்ளது. இந்த விவசாயத்தில் உரிமட்டை, கயிறு தயாரித்தல், நீரா பானம் தயாரித்தல் உள்பட உபதொழில்கள் அதிகமாக உள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் தென்னை விவசாயத்தை பாதுகாக்க முடியும். கிழக்கு கடற்கரை பகுதியில் சாகுபடி செய்யப்படும் தேங்காய்க்கு புவிசார் குறியீடு பெறவும் முயற்சி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story