பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க கோரிக்கை
x

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் என்று விவசாயிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெரம்பலூர்

வேளாண்மை கல்லூரி

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்கு அனைத்து பருவத்திலும் அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகியவை உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் வகித்து வருகிறது. பால் உற்பத்தியிலும் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது.

மாவட்டத்தில் வேப்பந்தட்டையில் பருத்தி ஆராய்ச்சி மையம் உள்ளது. ஆனால் அடிப்படையில் முழுமையாக விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி இல்லை என்பது அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெறும் வாக்குறுதியாக உள்ளது

பெரம்பலூரில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பெரம்பலூரில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர்.

ஆனால் இதுவரைக்கும் நிறைவேற்றப்படாமல் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. தற்போது பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனும் இது தொடர்பாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவாக போய் விடுகிறது

இதுகுறித்து குன்னம் தாலுகா, துங்கபுரத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறுகையில், பெரம்பலூரில் தனியார் வேளாண்மை கல்லூரிகள் இருந்தாலும், அதில் கட்டணம் செலுத்தி படிக்க நன்கு படிக்கும் ஏழை, எளிய மற்றும் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களால் இன்றுவரை முடியாத காரியமாக உள்ளது. அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால் அருகே மாவட்டங்களில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிலை உள்ளது. இதனால் சில மாணவர்களுக்கு வேளாண்மை படிப்பு கனவாக போய் விடுகிறது.

வசதி படைத்த குடும்பத்தை சோ்ந்த மாணவர்கள் தனியார் வேளாண்மை கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். மாணவர்களும், விவசாயிகள் பயன்பெற பெரம்பலூர் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் என்பதே விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. அதனை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும், என்றார்.


Next Story