பூவந்தியில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்-குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை


பூவந்தியில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்-குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூவந்தியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிவகங்கை


பூவந்தியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர், மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெறபட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 77 ஆயிரத்தி 691 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், புத்தகங்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நெல் கொள்முதல் நிலையம்

குறை தீர்க்கும் கூட்டத்தில் பூவந்தி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மாரி மற்றும் எல்.ஆதிமூலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகிருஷ்ணன், முருகன் முத்தையா, பாண்டியன், சக்கரவர்த்தி, பாக்கியம் உள்ளிட்டவர்கள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பூவந்தி, மடப்புரம் வருவாய் கிராமங்களில் தீவிர நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பூவந்தி, மடப்புரம், கழுங்குப்பட்டி, கோட்டை, கே.பெத்தானந்தல், தேளி ஆகிய கிராமங்களில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது. இதில் பூவந்தி பகுதியில் 800 ஏக்கர், மற்ற இடங்களில் 500 ஏக்கர் நெற்பயிர் முழு விளைச்சல் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பூவந்தியில் அமைக்கப்பட்டிருந்த நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகள் அரசின் நிர்ணய விலையை பெற்று பயன் அடைந்தனர் எனவே இந்த ஆண்டும் பூவந்தியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story