வாக்குச்சாவடிகள் மறுவரையறை மற்றும் சீரமைப்பு தொடர்பாக கோரிக்கைகள் தெரிவிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை மற்றும் சீரமைப்பு தொடர்பாக - இடர்பாடுகள், கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை மற்றும் சீரமைப்பு தொடர்பாக - இடர்பாடுகள், கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
860 வாக்குச்சாவடிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் நடத்திட ஏதுவாக 412 இடங்களில் 860 வாக்குச்சாவடிகள் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகள் மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் கள ஆய்வு செய்திட தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர்பதிவு அலுவலர்களை கோரப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்துவதற்கான கட்டமைப்புகள், கட்டிட ஸ்திரதன்மை, குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள அமைப்புகள், மின் வசதி போன்ற காரணிகளை ஆய்வு செய்திடவும், வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்திடவும் அனைத்து வாக்குச்சாவடிகளையும் 100 விழுக்காடு ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுவரையறை மற்றும் சீரமைப்பு
மேலும் தற்போது அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்காளர்களாக உள்ள நிலை, வாக்காளர்கள் இருப்பிட பகுதியிலிருந்து 2 கி.மீக்கு மேல் வாக்குச்சாவடிகள் இருப்பின் அதனை மறு ஆய்வு செய்தல், வாக்குச்சாவடி கட்டிடங்களை மாற்றுதல், வாக்காளர்களின் வசதிக்கேற்ப வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளை மாறுதல் செய்தல், வாக்காளர்களின் வசதிக்கேற்ப வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளை மறு ஆய்வு செய்தல் போன்றவற்றையும் பரிசீலித்து வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்ய உள்ளது.
வாக்குச்சாவடிகள் மறுவரையறை மற்றும் சீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு இடர்பாடுகள், மற்றும் கோரிக்கைகள் ஏதும் இருப்பின் எழுத்து மூலமாக தொடர்புடைய வாக்காளர்பதிவு அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.