சரக்கு ஆட்டோவில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
சரக்கு ஆட்டோவில் 650 கிலோ
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில், திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கார்த்தி மற்றும் போலீசார் திருமுருகன்பூண்டி-வஞ்சிப்பாளையம் ரோட்டில் ஊமசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவுக்குள் 50 கிலோ எடையுடன் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஆட்டோவை ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சித்திக் உசேன் (51) ஓட்டி வந்தார். அவர் திருப்பூர் அண்ணாநகர் குமரன் காலணியில் தங்கியிருந்து, தேவராயம்பாளையம், ராக்கியாபாளையம், அம்மாபாளையம், திருமுருகன்பூண்டி, கணியாம்பூண்டி, அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கேரளாவுக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சித்திக் உசேனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 650 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.