கும்பகோணத்தில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலைகள் மீட்பு


கும்பகோணத்தில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலைகள் மீட்பு
x

கும்பகோணத்தில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு.

சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தனது இல்லத்தில் பழமைவாய்ந்த சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு பி.ரவி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன், முத்துராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், வசந்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் மாசிலாமணியின் வீட்டை சோதனையிட்டனர். ஆனால் சிலை எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மாசிலாமணி, கும்பகோணம் சுவாமிமலை சர்வமானிய தெருவில் உள்ள இடத்துக்கு இந்த சாமி சிலைகளை எடுத்து சென்று பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் அடங்கிய மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் 1,000 ஆண்டு பழமைவாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான போக சக்தி தேவி, விஷ்ணு, புத்தர் உள்பட 8 சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த சாமி சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு முயற்சியை முறியடித்த தனிப்படை போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி உள்ளார். வெகுமதியும் அறிவித்துள்ளார்.


Next Story