சென்னையில் பதுக்கிய 15 பழங்கால சிலைகள் மீட்பு


சென்னையில் பதுக்கிய 15 பழங்கால சிலைகள் மீட்பு
x

சென்னையில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 பழங்கால சிலைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஈரோட்டை சேர்ந்த சுரேந்திரன் என்ற தரகர் அந்த சிலைகளை விற்பதற்கு விலை பேசி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த சிலைகளை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவிட்டார். ஐ.ஜி. தினகரன், சூப்பிரண்டு ரவி ஆகியோர் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சிலைவாங்கும் வியாபாரிகள் போல, தரகர் சுரேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுரேந்திரன் இதை உண்மை என்று நம்பி, ஈரோட்டில் இருந்து சென்னை திருவான்மியூர் வந்தார். திருவான்மியூர் ஜெயராம் தெருவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு மாறுவேட போலீசாரை அழைத்து சென்றார்.

15 பழமையான சிலைகள் மீட்பு

மாறுவேட போலீசார் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தரகர் சுரேந்திரனிடம் பேச்சு கொடுத்தபடி இருந்தனர். பேச்சை பார்த்து, வந்திருப்பது போலீசார் என்பதை சுரேந்திரன் கண்டு பிடித்துவிட்டார். உடனடியாக நைசாக தப்பி ஓடி விட்டார்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 பழங்கால சிலைகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும், வீட்டு உரிமையாளர் ரமேஷ்பாந்தியாவிடம் இல்லை. இதனால் 15 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அம்மன், புத்தர், சிவன், நடராஜர், நந்தி, நர்த்தன விநாயகர், ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் போன்ற 15 சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை.

கைது

இந்த சிலைகள் ஏதாவது ஒரு கோவிலில் திருடப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும், என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் ரமேஷ்பாந்தியாவிடம் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய தரகர் சுரேந்திரனையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story