சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் மீட்பு


சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் மீட்பு
x

உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட 3 சாமி சிலைகள் சென்னையில் மீட்கப்பட்டன.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சாமி சிலைகள் கடந்த 2011-ம் ஆண்டு கொள்ளை போனது. இதுகுறித்து கோவிலின் அர்ச்சகர் ஸ்ரீசைலம் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் வந்தது.

திருடப்பட்ட சாமி சிலைகளின் புகைப்பட தொகுப்பு கோவிலில் இருந்தது. அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இந்த கோவிலில் திருடப்பட்ட சாமி சிலைகள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது பிரதான சாலை முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ஷோபா துரைராஜன் வீட்டில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். இதில் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து கொள்ளை போன 3 சாமி சிலைகள் இருந்தன. மேலும் அங்கு அஸ்திரதேவர், அம்மன், வீரபத்ரா, மகாதேவி ஆகிய 4 சாமி சிலைகளும் இருந்தது.

பெண்ணிடம் விசாரணை

ஷோபா துரைராஜனிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், பழங்கால கலைப்பொருட்களை சேகரிப்பது தனது பொழுதுபோக்கு ஆகும். இந்த சிலைகளை கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் அபர்ணா கலைக்கூடத்தில் இருந்து வாங்கினேன் என்று தெரிவித்தார்.

அபர்ணா கலைக்கூடம் மறைந்த பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு சொந்தமானது ஆகும். எனவே இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அபர்ணா கலைக்கூடத்தின் ஊழியர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தன் வீட்டில் இருந்தது கோவிலில் திருடப்பட்ட சாமி சிலைகள் என்பதை உணர்ந்த ஷோபா துரைராஜன், அந்த சிலைகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் அவருடைய வீட்டில் இருந்த 4 சாமி சிலைகளையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த சாமி சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என்பதை அடையாளம் காண்பதற்கான அதன் புகைப்படங்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ரூ.5 கோடி மதிப்பு

உள்நாட்டில் திருடப்பட்ட கோவிலில் பழங்கால சிலைகளை உள்நாட்டிலே கைப்பற்றி இருப்பது இது முதல்முறை ஆகும். இந்த 3 சிலைகளும் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தவை என்றும், தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை நடத்தி சிலைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆகியோர் வெகுமதி வழங்கி பாராட்டினர்.


Next Story