தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு மீட்பு
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு மீட்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி -பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள இடத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாட்டை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அவர் சென்று விட்டார். மாட்டை கயிறு வைத்து கட்டாமல் விட்டதால், மேய்ந்து கொண்டே அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் பாழடைந்த கட்டிடம் இருந்த பகுதிக்கு வந்தது. புதருக்குள் தண்ணீர் தொட்டி தெரியாததால் மாடு திடீரென்று கால் தவறி தொட்டிக்கு விழுந்தது. மாடு விழுந்த சத்தத்தை கேட்டு பொதுமக்கள் வந்து பார்த்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் கணபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தொட்டியின் அருகில் குழி தோண்டி தொட்டியை உடைத்தனர். இதையடுத்து மாடு பத்திரமாக தொட்டியை விட்டு வெளியே வந்தது.