வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானை மீட்பு


வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானை மீட்பு
x

மசினகுடி அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். மேலும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

மசினகுடி அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். மேலும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குட்டி யானை

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அங்கு ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பசுந்தீவனம், தண்ணீருக்காக கூட்டமாக இடம் பெயர்ந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் மசினகுடி பகுதியில் நேற்று கனமழை பெய்தது.

இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதேபோல் மாவநல்லா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் காலை 8 மணிக்கு வாழைத்தோட்டம் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் குட்டி யானை ஒன்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

வனத்துறையினர் மீட்டனர்

பின்னர் ஆற்றில் வன ஊழியர்கள் இறங்கி குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் தாய் காட்டு யானை அப்பகுதியில் இல்லை. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். முன்னதாக சோர்வாக இருந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் திரவ உணவுகள் வழங்கினர்.

தொடர்ந்து குட்டி யானையை தாயுடன் சேர்ப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தாயுடன் வந்த குட்டி யானை, தண்ணீர் அருந்துவதற்காக அல்லது ஆற்றை கடப்பதற்கு வந்து இருக்கலாம். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் குட்டி யானை அடித்து வரப்பட்டு இருக்கலாம். இதனால் குட்டி யானையை சேர்ப்பதற்காக, தாய் யானையை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.



Next Story