ராஜவாய்க்காலில் சிக்கிய பசு மீட்பு
தேனியில், ராஜவாய்க்காலில் சிக்கிய பசு மீட்கப்பட்டது.
தேனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவருடைய பசுமாடு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. மாலையில் இருந்து அவர் தேடிப் பார்த்தும் பசு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் தேனி பழைய பஸ் நிலையம் பின்பகுதியில் ஜாமீன்தார் வளாகம் அருகில் ராஜவாய்க்காலில் அந்த பசுமாடு சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடியது. அந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சேறும், சகதியுமாக, புதர் மண்டிக் கிடக்கிறது. அப்பகுதியில் சிறு பாலமும், வாய்க்கலின் இருபுறமும் சிமெண்டு கரையும் உள்ளதால் மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மாட்டின் உரிமையாளரும் அங்கு வந்தார். பின்னர் ஒரு மணி நேரம் போராடி, கயிறு கட்டி மாட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த பசு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.