திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு மீட்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்


திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு மீட்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்
x

திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸ்காரர்

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமன் (வயது58). இவர் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்தவர். இவரது மனைவி சித்திரா கேரள மாநிலம் காட்டாக்கடையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

விக்கிரமன் மண்டைக்காடு, இரணியல், கொல்லங்கோடு, களியக்காவிளை ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்தார். களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்டாய ஓய்வு பெற்றதாக தெரிகிறது. ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு வங்கி மூலம் பெற்று வந்தார்.

இதற்கிடையே அவரது மகன்கள் இவரிடம் நைசாக பேசி ஓய்வூதிய தொகை வரும் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்டு பணத்தை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், விக்ரமன் வங்கியில் சென்று ஏ.டி.எம். கார்டை துண்டித்து விட்டார். அத்துடன் ஓய்வூதிய பலன்கள் நின்றுவிட்டதாக தெரிகிறது.

பிச்சை எடுத்து வந்தார்

இதையடுத்து மனைவி மற்றும் மகன்களால் அவர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு கையில் காசு இல்லாததால் உணவுக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

கடந்த 2½ ஆண்டுகளாக திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்தார். அவரது நிலமையை கண்டு சிலர் உணவு கொடுத்து வந்தனர். அந்த உணவை உண்டு பஸ் நிலையத்திலேயே தங்கி வந்தார். கம்பீரமாக போலீசாக பணியாற்றியவர், பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை பார்த்து பலரும் பரிதாபப்பட்டனர்.

காப்பகத்தில் ஒப்படைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி மற்றும் போலீசார் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து விக்கிரமனை மீட்டு முகச்சவரம் செய்து முடிவெட்டி, புதிய வேட்டி- சட்டைகள் அணிவித்து குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். பின்னர் நாகர்கோவில் அருகே உள்ள புளியடியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே நின்றுபோன ஓய்வூதியம் மற்றும் வங்கி கணக்குகளை எல்லாம் சீரமைத்து அவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தொகைகள் கிடைக்க ஆவண செய்யப்படும் என்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி கூறினார்.


Next Story