ஆறுகாட்டுத்துறையில், தண்ணீரில் மூழ்கிய விசைப்படகு மீட்பு
ஆறுகாட்டுத்துறையில், தண்ணீரில் மூழ்கிய விசைப்படகு மீட்பு
வேதாரண்யத்தில் நேற்று 11-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் ஆறுகாட்டுத்துறையில் தண்ணீரில் மூழ்கிய விசைப்படகு மீட்கப்பட்டது.
11-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் நேற்று 11-வது நாளாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
தண்ணீரில் மூழ்கிய விசைப்படகு மீ்ட்பு
விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு தடைகாலம் உள்ள நிலையில் ஆறுகாட்டுத்துறையில் உள்ள 50 விசைப்படகும் தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு துண்டில் முள் வளைவு பகுதியில் தண்ணீரில் மூழ்கியது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு தண்ணீரில் மூழ்கிய படகை மீட்டு மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் படகு பலத்த சேதம் அடைந்தது. தகவல் அறிந்ததும் வேதாரண்யம் மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா மற்றும் மீன் வளத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 11 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.